காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காணாமல் இருப்பதால், இந்தியாவுடனான இயல்பான உறவு ஒரு பகல் கனவாகவே மாறியுள்ளது என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். ஐ.நா கூட்டத்தில் பங்கேற்பதற்காக லண்டனில் தங்கியுள்ள அவர், அங்கு வெளிநாட்டு பாகிஸ்தானியர்களுடன் நடந்த சந்திப்பில் இவ்வாறு பேசினார்.
“இந்தியா – பாகிஸ்தான் அண்டை நாடுகள், ஆனால் காஷ்மீர் மக்களின் இரத்தம் வீதிகளில் ஓடிக்கொண்டிருக்கும் வரை அமைதி சாத்தியமில்லை. இந்தியா ஒத்துழைப்புடன் செயல்படாமல், போர் மனப்பான்மையோடு செயல்படுகிறது,” என விமர்சித்த அவர், பஹல்காம் தாக்குதல் குறித்து சர்வதேச விசாரணை வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், இந்தியாவுடன் நடைபெற்ற நான்கு போர்களால் பாகிஸ்தான் பில்லியன் கணக்கில் பணத்தை இழந்ததாக கூறிய அவர், “அந்தச் செலவுகள் நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்பட்டிருந்தால், பாகிஸ்தான் இன்னும் முன்னேறியிருக்கும்” என கூறினார். முடிவில், காஷ்மீர் மற்றும் காசா பிரச்சனைகள் மீது சர்வதேச சமூகம் சீரான கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
