நேபாளத்தில் நடந்து வரும் கடும் எதிர்ப்பு போராட்டங்களுக்கு மத்தியில், ஹோலி பெல் பள்ளியின் தலைமை மாணவரான அபிஸ்கர் ரவுத் (Abiskar Raut) என்பவரின் உணர்ச்சிமிகு பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளியின் ஆண்டு விழாவில் அவர் ஆற்றிய இந்த பேச்சு, நேபாளத்தின் அரசியல் நிலையற்ற தன்மை, ஊழல் மற்றும் வேலையின்மை குறித்து உரத்த குரலில் பேசுகிறது.
இரண்டு நிமிடம் 43 வினாடிகள் நீளமுள்ள இந்த வீடியோவில், அபிஸ்கர், “புதிய நேபாளத்தை உருவாக்கும் கனவுடன் இங்கு நிற்கிறேன். என் உள்ளத்தில் நம்பிக்கையும் உற்சாகமும் தீயாக எரிகிறது, ஆனால் என் இதயம் பாரமாக உள்ளது, ஏனெனில் இந்த கனவு பறிபோவது போல தோன்றுகிறது” என்று கூறினார்.
Bro gave this “Jai Nepal” speech in March 2025.
And now six months later in September 2025, youth of Nepal is burning down houses of corrupt politicians. pic.twitter.com/k011ermx6Q
— Incognito (@Incognito_qfs) September 9, 2025
நேபாளத்தை ஒரு தாயாக உருவகப்படுத்தி, அவர், “நம்மைப் பெற்று, வளர்த்த இந்த நாடு, நம்மிடம் வெறும் நேர்மை, உழைப்பு மற்றும் பங்களிப்பை மட்டுமே கேட்டது. ஆனால், நாம் என்ன செய்கிறோம்?” என்று கேள்வி எழுப்பினார். அரசியல் கட்சிகளை கடுமையாக விமர்சித்த அவர், அவர்கள் நாட்டை ‘சுயநல விளையாட்டுகளில்’ சிக்க வைத்து, இளைஞர்களை ‘வேலையின்மையின் விலங்குகளில்’ கட்டிப்போட்டதாக குற்றம்சாட்டினார்.
“நாங்கள் குரல் கொடுக்காவிட்டால், வேறு யார் கொடுப்பார்? நாங்கள் இருளை எரிக்கும் நெருப்பு, அநீதியை அழிக்கும் புயல்” என்று உரத்து முழங்கி, தனது பேச்சை முடித்தார். இந்த பேச்சு, நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டு, பிரதமர் கே.பி. சர்மா ஒலி பதவி விலகிய நிலையில், மீண்டும் வைரலாகியுள்ளது.
