திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த பயணிகளிடம் செக் போஸ்டில் வைத்து போலீஸ் ஒருவர் லஞ்சம் வாங்கிய விசித்திரமான கூத்துதான் இப்போது சோசியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த பயணி ஒருவர், அங்கு மதுபானம் கொண்டு வர அனுமதி இல்லை என்பது தெரிந்தும் ரகசியமாக காரில் மது பாட்டில்களை எடுத்து வந்துள்ளார்.

அப்போது அங்கே பணியில் இருந்த முதன்மை காவலர் (ஹெட் கான்ஸ்டபிள்) காரைச் சோதனையிட்டு மது பாட்டில்களைக் கச்சிதமாகக் கைப்பற்றியுள்ளார். ஆனால், சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல், “இதெல்லாம் உனக்கு நார்மல் ஃபைன்.. அடுத்த முறை வார்னிங் ஃபைன்..” என்று பந்தாவாகப் பேசி, அந்தப் பயணியிடம் லஞ்சப் பணத்தைக் கறந்துள்ளார்.

​அங்குதான் ட்விஸ்ட்டே ஆரம்பமாகிறது! லஞ்சப் பணத்தை வாங்கிக்கொண்டு, கைப்பற்றிய மது பாட்டில்களைத் திரும்பக் கொடுக்கும்போது, “ஏய்… கேமிரா தெரியுது சீக்கிரம் பாட்டில உள்ள சொருகு… Safe-ஆ கொண்டு போகணும் சரியா..” என்று கேமிராவுக்கு பயந்து செம லோக்கலாக ஐடியா கொடுத்துள்ளார் அந்த காவலர். ஆனால், ‘ஆப்பரேஷன் சக்சஸ்’ என்று நினைத்த காவலருக்குப் பெரிய அதிர்ச்சியாக, சுற்றுலாப் பயணியே மொத்தக் கூத்தையும் ரகசியமாகக் கேமராவில் வீடியோ எடுத்து இணையத்தில் தட்டிவிட்டுள்ளார்.

யார் சார் நீங்க?! கேமிரா இருக்குன்னு தெரிஞ்சும் இவ்வளவு கேசுவலா லஞ்சம் வாங்குறீங்களே என நெட்டிசன்கள் கலாய்த்துத் தள்ளிய இந்த வீடியோ வைரலான உடனே, மாவட்ட எஸ்பி அதிரடி ஆக்ஷன் எடுத்து அந்த முதன்மை காவலரை உடனடியாக ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.