சீனாவில் பொது இடத்தில் ஒரு மடிக்கணினியை 30 நிமிடங்கள் கண்காணிப்பு இல்லாமல் வைத்துவிட்டு, அதை யாரும் திருடவில்லை என்பதை வெளிப்படுத்திய ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோவில், டின்சோ என்பவர் தனது மடிக்கணினியை பொது இடத்தில் வைத்திவிட்டு, சீனாவின் பாதுகாப்பு மற்றும் சமூக நம்பிக்கையை சோதித்தார். “பாரிஸில் இது நினைத்துக்கூட பார்க்க முடியாது, ஆனால் சீனாவில் பாதுகாப்பும் பொது நம்பிக்கையும் முற்றிலும் வேறுபட்டவை” என அவர் தனது பதிவில் குறிப்பிட்டார். இந்த சோதனை, வெறும் அதிர்ஷ்டத்தை சோதிப்பது மட்டுமல்லாமல், சீனாவின் சமூக நெறிமுறைகளையும், குறைந்த சிறு குற்ற விகிதங்களையும் உணர்ந்து பார்க்கும் முயற்சியாக இருந்ததாக அவர் விளக்கினார்.

இந்த வீடியோ உலகளவில் பெரும் விவாதத்தை தூண்டியுள்ளது. பல நாடுகளைச் சேர்ந்தவர்கள், தங்கள் நாடுகளில் இப்படி ஒரு முயற்சி சாத்தியமில்லை என கருத்து தெரிவித்தனர். சீனாவின் கடுமையான பொது கண்காணிப்பு மற்றும் ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கலாச்சாரத்தை பலர் பாராட்டினர். “பிரேசிலில் மடிக்கணினி மட்டுமல்ல, நாற்காலி, மேசை கூட திருடப்பட்டிருக்கும்” என்று ஒருவர் கருத்து தெரிவிக்க, “தென்னாப்பிரிக்காவில் உங்கள் கையில் இருந்தே பறித்து விடுவார்கள்” என்று மற்றொருவர் கூறினார். மற்றொரு பயனர், சீனாவில் தனது பணப்பை மற்றும் 10,000 யுவான் மதிப்புள்ள தொலைபேசியை ஒரு உணவகத்தில் விட்டுவிட்டு, 8 மணி நேரம் கழித்து திரும்பி வந்தபோது எல்லாம் அப்படியே இருந்ததாகவும், அதனால் சீனாவை மிகவும் நேசிப்பதாகவும் குறிப்பிட்டார். இந்த வீடியோ, பொது இடங்களில் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை குறித்த முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளது.