சுவீடன் நாட்டின் புதிய சுகாதாரத்துறை மந்திரியாக நியமிக்கப்பட்ட எலிசபெத் லான் (வயது 48), பதவியேற்ற சில மணி நேரங்களில் செய்தியாளர் சந்திப்பின்போது திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்டாக்ஹோமில் நடந்த இந்த நிகழ்ச்சியில், பிரதமர் உல்ப் கிறிஸ்டர்சன் மற்றும் துணை பிரதமர் எப்பா புஷ் உடன் இணைந்து எலிசபெத் லான் செய்தியாளர்களைச் சந்தித்தார். நேரலையில் ஒளிபரப்பான இந்த சந்திப்பின்போது, அவர் திடீரென உடல்நலக்குறைவால் மயங்கி கீழே விழுந்தார்.
உடனடியாக துணை பிரதமர் எப்பா புஷ், செய்தியாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள் ஓடிச்சென்று எலிசபெத்திற்கு உதவி செய்தனர். அவரை வெளியே அழைத்துச் சென்று மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
பின்னர், எலிசபெத் லான் தனது உடல்நிலை குறித்து விளக்கமளித்தார். ரத்த சர்க்கரை அளவு குறைந்ததால் மயக்கம் ஏற்பட்டதாகவும், தற்போது தனது உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த சம்பவம் சுவீடனில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
