பற்களால் நகம் கடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய, பார்க்க வேண்டிய ஒரு விழிப்புணர்வுச் செய்தி சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. சில நேரங்களில் பெற்றோர்கள் பலமுறை கத்திக் கூச்சலிட்டுச் சொல்லிக் கொடுக்க முடியாத நல்ல பழக்கங்களை, ஆசிரியர்கள் செய்யும் ஒரே ஒரு எளிய பரிசோதனை மாணவர்களின் சிந்தனையையே மாற்றி விடுகிறது என்பதை இந்தச் சம்பவம் நிரூபித்துள்ளது. இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒரு ஆசிரியர் நகம் கடிப்பதால் ஏற்படும் பாதிப்புகளை மாணவர்களுக்கு மிகவும் சுவாரஸ்யமான முறையில் நேரடிப் ஆதாரத்துடன் விளக்கிக் காட்டியுள்ளார்.
அந்த ஆசிரியர் முதலில் நகம் கடிக்கும் மாணவர்களின் நகங்களுக்குள் இருக்கும் அழுக்குகளைச் சேகரித்து, அதனை ஒரு எளிய மைக்ரோஸ்கோப் (Microscope – நுண்ணோக்கி) அடியில் வைத்து மாணவர்களைப் பார்க்கச் செய்துள்ளார். வெளியில் இருந்து பார்க்கும்போது சுத்தமாகத் தெரியும் நகங்களுக்குள்ளும் எவ்வளவு கிருமிகளும், பாக்டீரியாக்களும் ஒளிந்திருக்கின்றன என்பதை மைக்ரோஸ்கோப் வழியாக நேரடித் திரையில் கண்ட மாணவர்கள் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
View this post on Instagram
இதனைப் பயன்படுத்திக் கொண்ட ஆசிரியர், கைகளை ஏன் அடிக்கடி கழுவ வேண்டும், நகங்களை ஏன் முறையாக வெட்ட வேண்டும் என்பதை மாணவர்களுக்குப் புரிய வைத்துள்ளார். சுகாதாரம் குறித்துப் பெரிய சொற்பொழிவு ஆற்றுவதை விட, இப்படி உண்மையை நேரடியாகக் கண்ணெதிரே காட்டுவதுதான் சிறந்தது என்றும், பள்ளிகளில் இதுபோன்ற அறிவியல் பூர்வமான சோதனைகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்றும் நெட்டிசன்கள் இந்த ஆசிரியருக்குப் பாராட்டுகளைக் குவித்து வருகின்றனர்.
