புதுடெல்லி நீதிமன்றம் ஒன்று, ஒரு பெண் இரவில் தாமதமான நேரத்தில் ஒரு ஆணிடம் தொலைபேசியில் பேசுவதாலேயே அவரது நடத்தையை நாம் கேள்விக்குள்ளாக்க முடியாது என்றும், அவாளுடைய அழைப்பு விவரப் பதிவுகளை  கோரி அவருடைய தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவதை நியாயப்படுத்த முடியாது என்றும் அதிரடியாகத் தெரிவித்துள்ளது. குடும்ப வன்முறை வழக்கு ஒன்றில், தனது மனைவி மற்றும் மற்றொரு நபரின் அழைப்பு விவரப் பதிவுகளைப் பாதுகாத்து வைக்கக் கோரிய கணவனின் மனுவை தள்ளுபடி செய்த விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை விசாரித்த கூடுதல் அமர்வு நீதிபதி ஷுனாலி குப்தா இந்த முக்கியக் கருத்தைக் கூறியுள்ளார்.

கடந்த ஜூன் 2 அன்று பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவில், ஒரு பெண் குறிப்பிட்ட நபருடன் சட்டவிரோதமான அல்லது கள்ளத்தொடர்பு வைத்துள்ளார் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படாதவரை, அவர் இரவில் யாருடனாவது பேசுவதை வைத்து மட்டுமே அவரது நடத்தையின் மேல் கேள்விக்குறியை எழுப்ப முடியாது என்று நீதிபதி தெளிவுபடுத்தியுள்ளார். இந்திய சமூகம் இப்போது ஒரு பெண் ஆணிடம் பேசுவதையே தடைசெய்யப்பட்ட விஷயமாகப் பார்த்த பழங்காலச் சமூகமாக இல்லை என்றும், மல்டிநேஷனல் கம்பெனிகள் (MNC) உட்பட அனைத்துத் துறைகளிலும் பெண்கள் வேலை செய்வதால் அவர்களுக்கு ஆண் சக ஊழியர்கள் இருப்பது சாதாரணமானது என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. தனிமனித உரிமை என்பது முழுமையானது அல்ல என்றாலும், ஒருவருடைய அழைப்பு விவரங்களைக் கோருவதற்கு முறையான மற்றும் வலுவான காரணங்கள் இருக்க வேண்டும் என்று கூறிய நீதிமன்றம், கணவன் தரப்பில் எந்தவொரு உறுதியான ஆதாரமும் இல்லாததால் அவரது மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.