பறவைகள் தானியங்கள், புழு பூச்சிகளை உண்பதை நாம் பார்த்திருப்போம், ஆனால் அவை சிறிய கற்களையும் சேர்த்து விழுங்குவது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். இதற்குப் பின்னால் ஒரு முக்கியமான அறிவியல் காரணம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் விளக்குகிறார்கள். மனிதர்களைப் போல பறவைகளுக்கு பற்கள் கிடையாது என்பதால், உணவை மென்று சாப்பிட முடியாமல் அவை அப்படியே விழுங்குகின்றன. இதனால், உணவை அரைப்பதற்காக இயற்கையிலேயே அவற்றின் வயிற்றில் ‘கிசர்ட்’ (Gizzard) என்ற ஒரு சிறப்பு உறுப்பு அமைந்துள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by SciMysticLab (@scimysticlab)

இது ஒரு சிறிய அரைவை இயந்திரம் போல செயல்படுகிறது. இந்த இயந்திரம் வேலை செய்வதற்கு கற்கள் தேவைப்படுவதால், பறவைகள் தானியங்களுடன் சேர்த்து சிறிய கற்களையும் விழுங்குகின்றன. இந்த கற்கள் கிசர்ட் பகுதிக்குச் சென்று, உணவை நன்றாக அரைத்து செரிமானத்திற்கு உதவுகின்றன.

அறிவியல் பூர்வமாக பறவைகளின் வயிறு இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பகுதியான ‘ப்ரோவென்ட்ரிகுலஸ்’ (Proventriculus) என்பதில் இரசாயன முறையில் உணவு பிரிக்கப்படுகிறது; இரண்டாவது பகுதியான ‘கிசர்ட்’ தசைநாரால் ஆனது, இங்குதான் கற்கள் உணவை அரைக்கின்றன. கோழி, புறா, கிளி உள்ளிட்ட 90 சதவீதத்திற்கும் அதிகமான பறவைகள் இந்த முறையில்தான் உணவைச் செரிமானம் செய்கின்றன.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய பறவை ஆராய்ச்சி நிறுவனங்கள் நடத்திய ஆய்வில், சில பறவைகள் வேண்டுமென்றே பளபளப்பான அல்லது குறிப்பிட்ட வடிவம் கொண்ட கற்களைத் தேர்ந்தெடுத்து உண்பது கண்டறியப்பட்டுள்ளது. கோழி வளர்ப்பவர்கள் கூட, கோழிகளின் தீவனத்தில் ‘கிரிட்’ (Grit – சிறிய கற்களின் கலவை) என்ற பொருளைக் கலக்கிறார்கள்; இது இல்லையென்றால் கோழிகளால் உணவைச் சரியாகச் செரிமானம் செய்ய முடியாது மற்றும் முட்டையிடும் திறனும் குறைந்துவிடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.