பாகிஸ்தானில் கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் வறுமை விகிதம் 7 சதவீதம் அதிகரித்து, அங்குள்ள ஏழை மக்களின் மொத்த எண்ணிக்கை 7 கோடியாக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல் உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட ‘பாகிஸ்தான் பொருளாதார ஆய்வு 2025-26’ அறிக்கையின்படி, கடந்த 2018-19 ஆம் நிதியாண்டில் 21.9 சதவீதமாக இருந்த வறுமை நிலையின் தாக்கம், தற்போது 28.9 சதவீதமாக அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. இதன் காரணமாக, கடந்த 6 ஆண்டு கால இடைவெளியில் மட்டும் சுமார் 2.7 கோடி மக்கள் புதிதாக வறுமைக் கோட்டுக்குக் கீழ் தள்ளப்பட்டு, தங்களின் அன்றாட அடிப்படைத் தேவைகளைக்கூடப் பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருவதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
மேலும், பாகிஸ்தானின் வருமானப் பகிர்வில் நிலவும் பெரும் முரண்பாடுகளைக் காட்டும் கினி குறியீடு 28.4 இல் இருந்து 32.7 ஆக உயர்ந்துள்ள நிலையில், நாட்டின் கிராமப்புறங்களே இந்த வறுமையால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. நகரப் பகுதிகளில் வறுமை நிலை 17.4 சதவீதமாக இருக்கும் வேளையில், கிராமப்புறங்களில் அது 36.2 சதவீதமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக உலகையே உலுக்கிய கோவிட்-19 பெருந்தொற்று, பாகிஸ்தானைத் தாக்கிய தொடர்ச்சியான மகா வெள்ளப்பெருக்குகள், இயற்கை பேரிடர்கள், கட்டுப்பாடற்ற பணவீக்கம், கடுமையான பணமதிப்பிழப்பு மற்றும் சர்வதேச நிதியத்தின் நிபந்தனைகளால் எடுக்கப்பட்ட தவறான பொருளாதாரக் கொள்கைகள் போன்றவையே இந்த ஒட்டுமொத்தப் பேரழிவிற்கும் முக்கியக் காரணங்கள் என்று வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
