விழுப்புரம் விக்கிரவாண்டி வேல்ஸ் பயணவழி உணவகத்தில் அரசுப் பேருந்துகள் நின்றுபோக தடைவிதிக்கப்பட்டு இருப்பதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அண்மை காலமாக அரசுப் போக்குவரத்து கழகப் பேருந்துகள் நிறுத்தம் செய்யும்  பயணவழி உணவகங்கள், கடைகளில் தரமற்ற உணவுகள் மற்றும் கூடுதல் விலைக்கு தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுவது, சுகாதாரமற்ற முறையில் கழிவறைகள் பராமரிக்கப்படுவது பற்றி புகார் வந்தது.

இதையடுத்து அவரது உத்தரவின்படி சாலையோர உணவகங்களின் செயல்பாட்டினை கடந்த 2 நாட்களாக போக்குவரத்துக்கழக உயர் அலுவலர்களால், திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் கடந்த 19 ஆம் தேதி போக்குவரத்துக்கழக உயர் அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொள்ளும்போது, விக்கிரவாண்டி அருகில் சாலைகள் இருபுறமும் உள்ள வேல்ஸ் உணவகம் பயணிகளுக்கு சுகாதாரமற்ற முறையில் தரமற்ற உணவு மற்றும் கூடுதல் விலைக்கு தின்பண்டங்கள் வழங்கியது கண்டறியப்பட்டது.

இதன் காரணமாக வேல்ஸ் உணவகத்தில் அரசு பேருந்துகள் நின்றுபோகும் உரிமமானது ரத்து செய்யப்படுகிறது. அதோடு எதிர்வரும் காலங்களில் அங்கீகரிக்கப்பட்ட சாலையோர பிற உணவகங்களும் ஆய்வு செய்யப்பட்டு குறைகள் கண்டறியப்பட்டால் அதனடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.