எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறநிலைத்துறை சார்பில் கோவில்களில் வசூலிக்கும் பணத்தை கல்லூரிகள் கட்ட பயன்படுத்துகிறார்கள் என்று குற்றம் சாட்டியிருந்தார். இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அமைச்சர் சேகர்பாபு அதிமுக ஆட்சிக்காலத்தில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா கூட அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள் கட்டினர் என்றும் அதிமுக ஆட்சிக்காலத்தின் போது அறநிலையத்துறை சார்பில் கட்டப்பட்ட பழனி ஆண்டவர் கல்லூரியை திறந்து வைத்தது எடப்பாடி பழனிசாமி தான் என்றும் இதையெல்லாம் மறந்துவிட்டு தற்போது பாஜகவின் ஊதுகுழலாக மாறிவிட்டார் என்றும் விமர்சித்திருந்தார்.

இதே போன்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்த நிலையில் தன்னுடைய பேச்சுக்கு எடப்பாடி பழனிசாமிக்கு விளக்கம் கொடுத்தார். இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் சேகர்பாபு எடப்பாடி பழனிசாமிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதாவது தான் சொன்ன கருத்துக்கு எடப்பாடி பழனிசாமி விளக்கம் கொடுத்தது பற்றி நிருபர்கள் கேள்விக்கு அவர் கூறியதாவது, எடப்பாடி பழனிசாமி தன்னுடைய பெயரை பல்டி சாமி என மாற்றிக் கொள்ளலாம்.

கோவில் பணத்தில் கல்லூரி கட்டுவது சதி செயல் என்று கூறிவிட்டு தற்போது மாற்றிப் பேசுவதா. எடப்பாடி பழனிசாமி திமுக தலைவர்களை மட்டும் இன்றி அவரது கட்சி தலைவர்களான ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் ஆகியோரையும் விமர்சிக்கிறார். மேலும் கொள்ளிக்கட்டையை எடுத்து தலையில் சொறியும் வேலையில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டுள்ளார் என்று கூறினார்.