வீட்டிலிருந்தே பணிபுரியும் முறை (Work From Home) ஊழியர்களுக்கு வசதியாக இருக்கும் என்று கருதப்பட்டாலும், சமீபத்தில் ஒரு நிறுவனம் விதித்துள்ள புதிய கட்டுப்பாடு ஊழியர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிதி நெருக்கடி காரணமாகப் பணியாளர்களைக் குறைத்து, சிறிய அலுவலகத்திற்கு மாறியுள்ள அந்நிறுவனம், இருக்கை வசதி பற்றாக்குறையால் சுழற்சி முறையில் ஊழியர்களை வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதித்துள்ளது.
ஆனால், இந்த அனுமதியைப் பெற ஊழியர்கள் டெல்லி-என்சிஆர் பகுதிக்குள் மட்டுமே இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். இதற்காக ஜிபிஎஸ் மூலம் ஊழியர்களின் இருப்பிடத்தை நிறுவனம் தொடர்ந்து கண்காணிப்பதும், குறிப்பிட்ட பகுதிக்கு வெளியே இருந்தால் வருகைப் பதிவு செய்ய முடியாது என்பதும் ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த விசித்திரமான விதியைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள ஊழியர் ஒருவர், இது பணியாளர்களின் சுதந்திரத்தில் தலையிடும் செயல் என்று விமர்சித்துள்ளார். “தேவைப்படும்போது உடனடியாக அலுவலகத்திற்கு வர வேண்டும் என்பதற்காகவே இந்தக் கட்டுப்பாட்டை விதித்துள்ளனர்” என்று அவர் கூறியுள்ளார்.
இணையத்தில் இது குறித்துக் கலவையான கருத்துகள் எழுந்துள்ளன; சிலர் இதைத் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடும் ‘நவீன கால அடிமைத்தனம்’ என்று கண்டித்துள்ளனர்.
அதேவேளையில், சிலரோ நிறுவனத்தின் அவசரத் தேவைகளுக்காகவும், சீரான பணிக்காகவும் இத்தகைய விதிகள் அவசியம் என்றும் ஆதரவு தெரிவித்துள்ளனர். பணியாளர்களின் இருப்பிடத்தைக் கண்காணிக்கும் இந்த விவகாரம் தற்போது பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது.
