தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் அதிரடியான திருப்பங்களைச் சந்தித்து வரும் நிலையில், “நெல்லிக்காய் மூட்டைபோல்” சிதறிப்போயுள்ளது திமுக கூட்டணி.

தவெக தலைவர் விஜய் தலைமையில் புதிய கூட்டணி ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து, கடந்த இரண்டு மாதங்களில்  திமுக கூட்டணி சுக்குநூறாக உடைந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் திமுக கூட்டணியை விட்டு அதிகாரப்பூர்வமாக விலகி, தவெக தலைமையிலான அமைச்சரவையில் பங்கு பெற்றுள்ள நிலையில், நேற்று சிபிஐ கட்சியும் கூட்டணியில் இருந்து வெளியேறியது.

இதனைத் தொடர்ந்து, “தற்போது திமுக கூட்டணி என்ற ஒன்றே களத்தில் இல்லை” என சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அதிரடியாகப் பேசியதன் மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கூட்டணியை விட்டு முற்றிலும் விலகியுள்ளது உறுதியாகியுள்ளது.

இந்த அரசியல் பூகம்பத்திற்கு மத்தியில், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கிய மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகளும், தற்போதைய அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு “திமுக கூட்டணி நமக்கு வேண்டாம்” எனத் தங்கள் தலைவர் கமல்ஹாசனுக்குக் கடுமையான அழுத்தங்களைக் கொடுத்து வருவதாக அறிவாலய வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.