ஸ்ரீவைகுண்டத்தில் முதலமைச்சர் விஜயின் பெண் ரசிகை ஒருவர், தவெக நிர்வாகிகளால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலை வாங்கித் தருவதாகக் கூறி காரில் அழைத்துச் சென்று இந்தத் துயரச் செயலை அரங்கேற்றியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் ஸ்ரீவைகுண்டம் தவெக எம்.எல்.ஏ. சரவணனுக்கு நெருக்கமானவர்கள் என்று கூறியுள்ள அவர், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் சமரசம் பேச எம்.எல்.ஏ. முயற்சி செய்ததாகவும், இதேபோல் மற்றொரு பெண்ணும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி இருப்பதாகவும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
குற்றவாளிகள் அமைச்சரின் பெயரைச் சொல்லியும், மேலிடத்திற்கு எல்லாம் தெரியும் என்று மிரட்டியும் பாதிக்கப்பட்ட பெண்ணை அச்சுறுத்தியதாக உதயநிதி தெரிவித்துள்ளார்.
“அந்த மேலிடம் யார்?” என்று பொதுமக்கள் தற்போது கேள்வி எழுப்பத் தொடங்கி இருப்பதாகவும், தமிழ்நாட்டுப் பெண்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
