சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜனதா முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, தேசிய ஜனநாயக கூட்டணியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து பேசினார். அதில், டி.டி.வி. தினகரனும், ஓ.பன்னீர் செல்வமும் கூட்டணியில் இருந்து விலகியிருப்பது குறித்து, “இது ஒரு நிரந்தர முடிவல்ல. இருவரும் நல்ல உள்ளம் கொண்டவர்கள். நான் தினகரனிடம் நேரடியாக தொலைபேசியில் பேசியுள்ளேன். அவர் மறுபரிசீலனை செய்வார் என நம்புகிறேன். அதனால் இதை பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை” என்று தெரிவித்தார்.

மேலும், தினகரன் மீது பாராட்டுக்களையும் தெரிவித்த அண்ணாமலை, “மூப்பனார் நினைவு நிகழ்ச்சிக்கு அவரை ஜி.கே. வாசன் நேரில் அழைத்திருந்தது, கூட்டணிக்குள் நல்லிணக்கம் உள்ளதை காட்டுகிறது. 2024 தேர்தலுக்கு எந்த இடமும் வேண்டாம் என்று கூறி வந்தவர் தினகரன். அவர் ஒரு பெருந்தன்மை மிக்க அரசியல்வாதி. நாங்கள் இருவர் மீதும் எங்களுக்கு மரியாதை இருக்கிறது. தற்போது யூகங்களை வைத்து அரசியல் விவாதம் செய்ய வேண்டாம். சரியான நேரத்தில் தலைவர்கள் பேசுவார்கள்” என்றார்.

அத்துடன், பா.ஜனதா தலைமை மீது தமக்கு எந்த அதிருப்தியும் இல்லையெனவும், தேசிய ஜனநாயக கூட்டணி தி.மு.க. ஆட்சியை அகற்றும் நோக்குடன் உறுதியாக இயங்க வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் தெரிவித்தார். “விஜய் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர். ஆனால் தேர்தலில் ஆட்சி அமைப்பது என்பது முழுமையான கூட்டணியின் வேலை. அதிமுக–பாஜக கூட்டணியே தமிழ்நாட்டில் வெற்றிபெறும்” என்றார் அண்ணாமலை. தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் ஏற்பட்ட குழப்பங்களை தீர்க்கும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அவர் உறுதியளித்தார்.