தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்காத 37 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தொழிலாளர் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் குடியரசு தினமான நேற்று தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்காத 37 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை அலுவலர்கள் அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கின்றார்கள். இது பற்றி தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர் உதவியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, சென்னை தொழிலாளர் ஆணையர் உத்தரவின்படி மதுரை தொழிலாளர் கூடுதல் ஆணையர் மற்றும் நெல்லை மண்டல தொழிலாளர் இணை ஆணையர் உள்ளிட்டோர் ஆலோசனைப்படி தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் குடியரசு தினமான நேற்று தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர், சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்கள்.

அப்போது தேசிய விடுமுறை தினமான நேற்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காமல் வேலையில் பணியமர்த்திய செயலுக்காக 18 கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், 15 உணவு நிறுவனங்கள், 4 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளிட்டவை மீது தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டம், உணவு நிறுவனங்கள் சட்டம் மற்றும் மோட்டார் போக்குவரத்து தொழிலாளர்கள் சட்டத்தின் படி மொத்தமாக 37 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்து இருக்கின்றார்.