மேற்காசியாவில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 100 டாலரைத் தாண்டியுள்ளது. இதன் எதிரொலியாக பாகிஸ்தானில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் முன்னெப்போதும் இல்லாத வகையில் லிட்டருக்கு 55 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த இக்கட்டான சூழலைச் சமாளிக்கப் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை அதிரடியாக அறிவித்துள்ளார். அதன்படி அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டும் அலுவலகம் வர வேண்டும் என்றும், எஞ்சிய நாட்களில் 50 சதவீத ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் அடுத்த இரண்டு மாதங்களுக்கு அரசு வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு பாதியாகக் குறைக்கப்படுவதுடன், அமைச்சர்கள் மற்றும் ஆலோசகர்கள் தங்களின் ஊதியத்தைப் பெற மாட்டார்கள் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்தைச் சீரமைக்க ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தில் 25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு இரண்டு வாரங்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உயர்கல்வி நிறுவனங்கள் இணைய வழி கல்விக்கு மாற்றப்பட்டுள்ளன. எரிபொருள் இறக்குமதியை நம்பியுள்ள பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு இந்தப் போர்ச் சூழல் பெரும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகப் அந்நாட்டுப் பிரதமர் கவலை தெரிவித்துள்ளார்.
