ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் கடந்த பிப்ரவரி மாதம் இருபத்தி எட்டாம் தேதி முதல் வான்வழியாக நடத்தி வரும் தொடர் தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டதை அந்த நாட்டு அரசு உறுதி செய்துள்ளது.

மேலும் பாதுகாப்பு அமைச்சர் அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல் படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோரும் இந்தத் தாக்குதலில் பலியாகியுள்ளனர். இந்தச் சூழலில் ஈரானின் அடுத்த உச்ச தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான நிபுணர்கள் சபை நேற்றிரவு அவசரமாகக் கூடியது. இதில் மறைந்த தலைவர் காமேனியின் மகனா மோஜ்தபா காமேனியை நாட்டின் புதிய உச்ச தலைவராகத் தேர்ந்தெடுப்பதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் இறையாண்மையை மீறி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் எடுத்து வரும் ராணுவ நடவடிக்கைகள் ஈரானை பலவீனப்படுத்தும் நோக்கம் கொண்டவை என்று அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகே இன்று தெரிவித்துள்ளார். ஈரானின் பரவலான எரிசக்தி வளங்களைச் சட்டவிரோத வழியில் அபகரிப்பதே அமெரிக்காவின் உண்மையான நோக்கம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஈரானுக்கு எதிரான தாக்குதலுக்கு முன்னதாகப் பல கட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்த போதிலும் அவை அனைத்தும் தங்களின் ராணுவ நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்காகவே பயன்படுத்தப்பட்டதாக அவர் கூறியுள்ளார். நாட்டைப் பிளவுபடுத்தி எண்ணெய் வளங்களைக் கைப்பற்ற நினைக்கும் இத்தகைய குற்றச் செயல்களை உலக நாடுகளுக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் உண்மைகள் மிகத் தெளிவாக இருப்பதாகவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.