ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஆற்றிய உரையின் போது அவருக்கு ஏற்பட்ட கடுமையான இருமல் காரணமாக அவரது உடல்நிலை குறித்து மீண்டும் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதற்காகத் தயார் செய்யப்பட்ட அந்தப் பதிவு தற்செயலாக நேரலையில் வெளியான போது அதில் புதின் பேச முடியாமல் திணறுவதும் மீண்டும் ஒருமுறை அந்த உரையைப் பதிவு செய்யக் கோருவதும் தெளிவாகப் பதிவாகியுள்ளது.

இந்தத் தவறு குறித்து அதிகாரிகள் விளக்கம் அளிப்பதற்கு முன்பே அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவின. வலுவான மற்றும் ஆரோக்கியமான தலைவராகக் காட்டப்பட்டு வந்த புதினின் பிம்பத்திற்கு இந்தச் சம்பவம் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

 

கடந்த சில நாட்களாகவே புதின் மிகவும் சோர்வாகவும் வயது முதிர்ந்த தோற்றத்துடனும் காணப்படுவதாகத் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் தற்போது எழுந்துள்ள இந்த உடல்நிலை பாதிப்பு கூடுதல் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே புதின் தனது பயணங்களின் போது புற்றுநோய் நிபுணர் உள்ளிட்ட 13 மருத்துவர்கள் அடங்கிய குழுவை உடன் அழைத்துச் செல்வதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உடனான சந்திப்பின் போதும் புதின் நடப்பதற்குக் சிரமப்பட்டதும் அவரது கால்கள் நடுங்கியதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய தொடர்ச்சியான சம்பவங்கள் அவருக்குப் பார்க்கின்சன் அல்லது புற்றுநோய் போன்ற பாதிப்புகள் இருக்கலாம் என்ற ஊகங்களை உலக நாடுகளிடையே வலுப்படுத்தியுள்ளன.