நடிகர்கள் ராமராஜன், ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் நடிப்பில் எக்ஸட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம், “சாமானியன்” எனும் பெயரில் படம் எடுத்துள்ளது. ராஹேஷ் என்பவர் இயக்கும் இப்படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை பார்த்துவிட்டு ஆர்ட் அடிக்ட் என்ற நிறுவனத்தின் உரிமையாளரான வியன் ஆர்மான் என்பவர் “சாமானியன்” எனும் பெயரில் படத்தை வெளியிடுவதை தடுக்க கோரி வழக்கு தொடர்ந்தார். கடந்த 2012 ஆம் வருடத்தில் படத்தின் தலைப்பை பதிவுசெய்து தொடர்ந்து புதுப்பித்து வருவதாகவும், அதே பெயரில் படத்தை வெளியிடுவது காப்புரிமையை மீறிய செயல் என்பதால் “சாமானியன்” என்ற தலைப்பில் படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இவ்வழக்கு நீதிபதி சி.சரவணன் முன் விசாரணைக்கு வந்தபோது எக்ஸட்ரா நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, தாங்களும் அப்படத்தின் தலைப்பை பதிவுசெய்து, அது ஏப்ரல் மாதம் வரை செல்லுபடியாகும் என்பதால் இத்தலைப்பை பயன்படுத்தியதில் தவறில்லை என வாதிட்டனர். அதோடு படத்திற்கு 5 கோடி ரூபாயும், விளம்பரத்திற்காக 1 கோடி ரூபாயும் செலவழிக்கப்பட்டிருக்கும் நிலையில், படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிட்டு இருப்பதாக அவர் விளக்கமளித்தார். பட தலைப்பிற்கு காப்புரிமை கேட்க முடியாது என்ற காரணத்தால் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அவர் வாதிட்டார். இதை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.