புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் உள்ள பட்டவைய்யனார் கோவிலில் சில மாதங்களுக்கு முன் நடந்த கும்பாபிஷேகத்தின்போது இருதரப்பினரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சனை ஏற்பட்டது. இதனையடுத்து இந்த ஆண்டு திருவிழா நடத்துவது குறித்து இரு தரப்பினரும் இணைந்த சமாதான கூட்டம் நடைபெற்றது. அப்போது ஒரு தரப்பினர் பால்குடம் எடுத்து அன்னதானம் வழங்குவதாக முடிவு செய்யப்பட்டது. ஆனால் கூட்டத்தில் சம்மதிப்பது போல் இருதரப்பினரும், இது தொடர்பாக சரியான முடிவு எடுக்கவில்லை. மற்றொரு தரப்பினர் அங்குள்ள காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர்.

இந்நிலையில் நேற்று காலை பால்குடம் எடுத்து அன்னதானம் வழங்க ஒரு தரப்பினர் தயாராக இருந்தார்கள். ஆனால் மற்றொரு தரப்பினர், அவர்களை கோவிலுக்குள் பால் குடம் எடுக்கவும், அன்னதானம் வழங்கவும் அனுமதிக்க மறுத்துள்ளனர். இதனால் கோபம் அடைந்த, அவர்கள்  அங்குள்ள பேருந்து நிலையத்தின் அருகே பால்குடம் எடுப்பதற்காக வாங்கிய பால் மற்றும் அன்னதானத்திற்காக நறுக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை அங்குள்ள சாலைகளில் கொட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அங்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும், உடன்பாடு ஏற்படாத நிலையில், அவர்களை கைது செய்தனர். இதில் பெண்கள் உள்பட 51 பேரை  கைது செய்த போலீசார்,அவர்களை அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்து, பின்  மாலையில் விடுவித்தனர்.