ஜப்பானில் பிரபல பாப் ஸ்டாரும் நடிகையுமாக இருப்பவர் மிகோ நகையாமா(54). இவருக்கு ஒரு மகன் இருக்கிறார். அவர் தனது முன்னாள் கணவர் இசை கலைஞர் ஹிடோனாரி சுஜியின் பராமரிப்பில் இருக்கிறார். இவர் கடந்த 1995ம் ஆண்டு வெளியான ‘லவ் லெட்டர்’ என்ற திரைப்படத்தின் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த படம் விதவை அந்நியருக்கு எழுதிய கடிதங்களைப் பற்றிய கதை ஆகும். இப்படம் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இவர் நேற்று ஒசாகாவில் ஒரு கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டு இருந்தார். ஆனால் உடல் நலக்குறைவால் அதை ரத்து செய்து விட்டார். இதையடுத்து அவரது வீட்டின் உள்ள குளியல் தொட்டியில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து அவரது நிறுவனம் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில் அவர் இறந்து விட்டதாகவும், இந்த ‘திடீர் நிகழ்வால் நாங்கள் திகைக்கிறோம்’ என்று கூறப்பட்டுள்ளது.