விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள டி.கொளத்தூரில் விவசாயியான முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினரான நாராயணன் என்பவருக்கும் வீட்டுமனை சம்பந்தமாக முன் விரோதம் இருந்தது. இந்நிலையில் முருகன் வளர்த்து வந்த கோழிகள் அடுத்தடுத்து காணாமல் போனதால் முருகனின் மனைவி மான்விழி வீட்டிற்கு வெளியே வந்து திட்டியதாக தெரிகிறது.

அப்போது அங்கு வந்த நாராயணன் எங்கள் வீட்டை பார்த்து ஏன் திட்டுகிறீர்கள்? என கேட்டதால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் முருகன், மான் விழி, நாராயணன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். இதுகுறித்த புகாரின் பேரில் இரு தரப்பை சேர்ந்த நபர்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.