
24 பாலியல் வன்கொடுமைகள் உட்பட 49 குற்றங்கள் செய்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் லண்டன் நீதிமன்றத்தில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரை சேர்ந்த காவல்துறை அதிகாரி டேவிட் கேரிக் என்பவர் 2021-ஆம் ஆண்டுகளில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. அவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி பல பெண்களை சீரழித்ததாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. பாதிக்கப்பட்ட பல பெண்கள் அவருக்கு எதிராக புகார் அளிக்க தயக்கம் காட்டி வந்தனர்.
ஆனால் கடந்த ஆண்டு பெண் ஒருவர் கொடுத்த பாலியல் வன்கொடுமை புகாரை அடுத்து டேவிட் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு பல பெண்கள் அவர் மீது பாலியல் புகார்களை போலீசில் கொடுத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக அவர் மீது பல வழக்குகள் தொடரப்பட்டது. இவ்வழக்குகள் லண்டன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது டேவிட் கேரிக் அளித்த வாக்குமூலத்தில் 12 பெண்களை 24 முறை பாலியல் வன்கொடுமை செய்தது உட்பட 49 குற்றங்களை செய்ததாக ஒப்புக்கொண்டார். இச்சம்பவம் லண்டனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.