உத்தரப் பிரதேச மாநிலம் ஏட்டாவா மாவட்டத்தில், மத்திய சிறைச்சாலை உள்ளே இருந்து எப்படி இருக்கும் என்பதைப் பார்ப்பதற்காகவே வாலிபர் ஒருவர் குற்றம் செய்து போலீசில் சரணடைந்துள்ள வினோதச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. அதாவது கோமல் சிங் என்ற இளைஞர், காவல்துறையினரிடம் தனது விசித்திரமான ஆசை குறித்துப் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மணல் மற்றும் ஜல்லி ஏற்றிச் செல்லும் டிராக்டர் ஓட்டுநரான அவர், இதற்கு முன்பு ஓராய் சிறையில் மூன்று முறை அடைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். அங்குச் சென்றது அவருக்குப் பழகிவிட்டதால், இந்த முறை எப்படியாவது மத்திய சிறைச்சாலைக்குச் சென்றுவிட வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. தனது இந்த வினோத ஆசையை நிறைவேற்றிக் கொள்ள, அவர் தனது சொந்த மனைவியின் நெஞ்சில் துப்பாக்கியை வைத்து மிரட்டியுள்ளார்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு, அவரே முன்வந்து காவல்துறையிடம் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை ஒப்படைத்துச் சரணடைந்துள்ளார். வீட்டில் எந்தப் பெரிய சண்டையும் இல்லை என்றும், சிறைக்குச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே இதைச் செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். போலீசாரிடம் பேசும் போது எந்தவொரு பயமும் இல்லாமல், சிரித்தபடியே கேமராவைப் பார்த்து அவர் கையசைப்பது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தனக்குக் குழந்தை இல்லாததால் மனைவியுடன் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படும் என்றும், ஆனால் அவருடன் சேர்ந்து வாழவே விரும்புவதாகவும் கோமல் சிங் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “மத்திய சிறைக்குச் செல்ல நினைப்பது சினிமா கதை போல உள்ளது” என்றும், “மனைவியை துப்பாக்கியால் மிரட்டியது கடுமையான குற்றம், சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் கூறி வருகின்றனர். மேலும் சிலர், அந்த இளைஞருக்கு ஏதேனும் மனநலப் பிரச்சினை இருக்கலாமா என்ற கோணத்திலும் கவலை தெரிவித்துள்ளனர்.