அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர், அங்கிருந்த பொதுமக்களின் ஆரவாரத்திற்கு இடையே இந்திய தேசியக் கொடியைக் கிழித்து அவமதிப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உலகளவில் பெரும் கொந்தளிப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் எலியா ஷாஃபர் என்ற பயனர் பகிர்ந்துள்ள இந்த வீடியோ, டெக்சாஸின் பிரிஸ்கோ பகுதியில் உள்ள நகரசபை கட்டிடத்திற்கு வெளியே எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
FRISCO: “F*ck India! F*ck India!”
A Texas resident @Channel6ixNEWS rips an Indian flag in front of city hall
Voicing anger against the Indian immigration invasion in north Dallas pic.twitter.com/N6Ec0oVSUT
— E (@ElijahSchaffer) June 3, 2026
“>
அந்த வீடியோவில், வாயில் சிகரெட்டுடன் நிற்கும் ஒரு நபர், வட டல்லாஸ் பகுதியில் இந்தியர்களின் குடியேற்றம் அதிகரித்து வருவதற்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில், இந்தியக் கொடியை ஆக்ரோஷமாகக் கிழித்தெறிகிறார். அப்போது அவரைச் சுற்றியிருக்கும் கூட்டத்தினர் “லெட்ஸ் கோ” எனக் கூச்சலிட்டு அவருக்கு ஆதரவாகக் குரல் எழுப்புவது அந்த வீடியோவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாகப் பரவியதை அடுத்து, உலகெங்கிலும் உள்ள இணையவாசிகள் தங்களது மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்தச் செயல் தங்களுக்கு மிகுந்த மனவேதனையை அளிப்பதாகப் பல இந்தியர்கள் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வரும் வேளையில், அமெரிக்காவின் வேலைவாய்ப்பு மற்றும் குடியேற்றக் கொள்கைகளில் உள்ள குளறுபடிகளே இதுபோன்ற வெறுப்புணர்வுக்குக் காரணம் எனச் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறிப்பாக, இந்தியர்கள் சட்டப்பூர்வமாக விசா பெற்று,அமெரிக்க நிறுவனங்களின் தொழில்நுட்பத் தேவைகளை நிவர்த்தி செய்து, முறையாக வரி செலுத்தி வருவதாகவும், கொள்கை ரீதியான விவாதங்களை விடுத்து இதுபோன்ற வெறுப்புப் பிரச்சாரங்களில் ஈடுபடுவது தீர்வாகாது என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதேநேரம், வெளிநாடுகளில் இந்திய வம்சாவளியினரின் அசுர வளர்ச்சியைப் பார்த்துப் பொறாமைப்படுபவர்களே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாகக் கூறி இணையத்தில் தற்போதும் காரசாரமான விவாதங்கள் நீடித்து வருகின்றன.
