பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது, மைதானத்தில் விளம்பர நோக்கத்திற்காகச் செய்யப்பட்ட விநோதமான செயல் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இப்போட்டியின் இடைவேளையின் போது, சன்ஸ்கிரீன் (சூரிய ஒளியில் இருந்து தோலைப் பாதுகாக்கும் கிரீம்) தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் விளம்பரத் தூதுவர்களாக வந்திருந்த தன்னார்வலர்களும் மாடல்களும், மைதானத்தில் அமர்ந்து தங்களது முகத்தில் சன்ஸ்கிரீன் கிரீம்களைத் தடவிக் கொண்டனர். சூரிய வெளிச்சம் இல்லாத நேரத்தில், செயற்கை மின்விளக்குகளின் (Floodlights) வெளிச்சத்தில் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த போது இந்த விளம்பரம் அரங்கேறியது தான் தற்போதைய பேசுபொருள்.

பகல் நேரத்தில் சூரியக் கதிர்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளப் பயன்படுத்தப்படும் சன்ஸ்கிரீனை, இரவு நேரத்தில் போட்டி நடக்கும் போது மாடல்கள் முகத்தில் பூசிய புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவின. “இரவு நேரத்தில் எதுக்கு சன்ஸ்கிரீன்?” என்றும், “விளம்பரம் செய்வதற்கு ஒரு விவஸ்தை இல்லையா?” என்றும் நெட்டிசன்கள் இந்த வீடியோவைப் பகிர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தையும், அந்த நிறுவனத்தையும் கடுமையாகக் கிண்டல் செய்து வருகின்றனர். விளம்பர உத்திக்காக நேரக் காலம் தெரியாமல் நள்ளிரவில் சன்ஸ்கிரீன் தடவப்பட்ட இந்த விநோதச் சம்பவம், கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.