தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டி20 மும்பை லீக் கிரிக்கெட் போட்டியில், சோபோ மும்பை ஃபால்கன்ஸ் அணியின் கேப்டனும், இந்திய நட்சத்திர வீரருமான ஷ்ரேயஸ் ஐயர் நடு மைதானத்தில் படுத்துக் கிடந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. போட்டியின் போது நடுவர்களின் ‘டிஆர்எஸ்’ (DRS) மறுஆய்வு முடிவிற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. இதனால் பொறுமையிழந்த ஷ்ரேயஸ் ஐயர், ஆட்டம் தற்காலிகமாக நின்றிருந்த இடைவெளியில், யாருமே எதிர்பாராத விதமாக மைதானத்தின் புல்வெளியில் மல்லாக்க படுத்து தனது தனித்துவமான பாணியில் அதிருப்தியை வெளிப்படுத்தினார். இந்திய கிரிக்கெட்டின் முன்னணி வீரர்களில் ஒருவரான ஷ்ரேயஸ் ஐயர், போட்டி நடக்கும் போதே இப்படி சாதாரணமாக மைதானத்தில் படுத்திருந்த விசித்திரமான காட்சி அங்கிருந்த ரசிகர்களைப் பெருமளவில் கவர்ந்ததுடன், மைதானத்தில் சிரிப்பலையையும் ஏற்படுத்தியது.

இந்த நீண்ட தாமதத்தால் விரக்தியடைந்த மும்பை பேட்டரான ஷ்ரேயஸ் ஐயர் ஏம்பா.. இவ்வளவு நேரமா எடுத்துப்பீங்க? என்று ஹிந்தியில் புலம்பியபடியே எழுந்து தனது சக வீரர்களுடன் இணைந்த ஆடியோவும் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. நடப்பு டி20 மும்பை லீக் தொடரின் முக்கிய ஈர்ப்பாக விளங்கும் ஷ்ரேயஸ் ஐயரின் இந்த செயல், கிரிக்கெட்டின் மற்றொரு வேடிக்கையான பக்கத்தை ரசிகர்களுக்குக் காட்டியுள்ளது. இருப்பினும், நடப்புத் தொடரில் அவர் தலைமையிலான சோபோ ஃபால்கன்ஸ் அணிக்கு இதுவொரு சிறந்த தொடக்கமாக அமையவில்லை. மோசமான ரன் ரேட் காரணமாக புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் அந்த அணி, அடுத்தடுத்த போட்டிகளில் பலமாக மீண்டெழும் நோக்கில் தீவிரமாகத் தயாராகி வருகிறது.