ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில் தனது அசாத்திய பேட்டிங் திறமையால் உலகையே வியக்க வைத்த 15 வயது இளம் கிரிக்கெட் நட்சத்திரம் வைபவ் சூர்யவன்ஷி, பீகாரில் உள்ள தனது சொந்த கிராமமான சமஸ்திப்பூரின் தாஜ்பூருக்கு வருகை தந்துள்ளார். கடந்த 2025 ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ரூ.1.10 கோடிக்கு வாங்கப்பட்ட வைபவ், தனது அறிமுக சீசனின் 3-வது போட்டியிலேயே சதம் அடித்து அசத்தினார். அதனைத் தொடர்ந்து, அண்டர்-19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் சதம் விளாசி இந்தியாவை சாம்பியனாக்கிய அவர், தற்போதைய 2026 ஐபிஎல் தொடரில் 16 இன்னிங்ஸ்களில் 776 ரன்கள் குவித்து, மிக இளம் வயதில் ‘ஆரஞ்சு கேப்’ வென்ற வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.
மேலும், ஒரே சீசனில் அதிக சிக்சர்கள் (72 சிக்சர்கள்) அடித்த கிரிஸ் கெய்லின் சாதனையையும் தகர்த்து, எலிமினேட்டர் மற்றும் குவாலிஃபையர் போட்டிகளில் முறையே 97, 96 ரன்கள் எடுத்து அசத்தினார். இந்த அசாத்திய திறமையால் தற்போது இந்திய ‘ஏ’ அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள வைபவ், ஜூன் 9 முதல் இலங்கையில் தொடங்கவுள்ள முத்தரப்பு தொடரில் பங்கேற்க உள்ளார்.
இந்த அசுர சாதனைக்குப் பிறகு சொந்த ஊர் திரும்பிய வைபவ் சூர்யவன்ஷியைக் காண, அவரது வீட்டின் முன் உள்ளூர் மக்கள், ரசிகர்கள், யூடியூபர்கள் மற்றும் ஊடகங்கள் எனப் பெருமளவிலான கூட்டம் அலைமோதி வருகிறது. ஒரு பெரிய செலிபிரிட்டிக்கு இருப்பது போன்ற இந்த மக்கள் கூட்டத்திற்குப் பின்னால் வைபவ் மற்றும் அவரது பெற்றோரின் பல ஆண்டுகால கடுமையான உழைப்பும், அர்ப்பணிப்பும் ஒளிந்துள்ளது. வைபவ் 4 வயதாக இருக்கும் போதே அவரது தந்தை சஞ்சு, தினமும் அதிகாலை 4 மணி பேருந்தைப் பிடித்து பாட்னாவிற்கு பயிற்சிக்கு அழைத்துச் சென்றுள்ளார்;
அதேபோல் அவரது தாய் ஆர்த்தி சூர்யவன்ஷி, நள்ளிரவு 2 மணிக்கே எழுந்து வைபவிற்கான உணவைத் தயாரித்து அனுப்பியுள்ளார். இத்தகைய கடினமான ஒழுக்கமும், பயிற்சியுமே இன்று தன்னை விட இருமடங்கு வயது மூத்த பந்துவீச்சாளர்களின் அதிவேக பந்துகளை வைபவ் அச்சமின்றி எதிர்கொள்ளக் காரணமாக அமைந்துள்ளது. தற்போது ஒட்டுமொத்த சமஸ்திப்பூர் கிராமமே இந்த 15 வயது சாதனை நாயகனைக் கொண்டாடி மகிழ்கிறது.
