கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தொற்று மேலாண்மைக்காகவே பணியமர்த்தப்பட்ட செவிலியர்களை பணி நீக்கம் செய்து பிறப்பிக்கப்பட்ட ஆணையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பழைய ஓய்வூதியம் மற்றும் அகவிலைப்படிக்காக போராடுகிறார்கள்.

அதன் பிறகு ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம், முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் பிறப்பிக்கப்பட்ட ஆணையை அமல்படுத்துமாறு மருத்துவர்கள் போராட்டம், விளைநிலங்களை கையகப்படுத்துவதாக விவசாயிகள் போராட்டம், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொதுத்துறை நிறுவன பணிகள் வெளி முகமை மூலம் மேற்கொள்ளப்படுவதை கண்டித்து தற்காலிக ஊழியர்கள் போராட்டம் என தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் புத்தாண்டு பரிசாக கொரோனா காலத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கிற 2500 செவிலியர்களை பணிநீக்கம் செய்து திமுக அரசாணை பிறப்பித்திருப்பது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் இருக்கிறது. எனவே இந்த அரசாணையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். மக்களை வாழ வைப்பதற்கு தான் மக்களாட்சியே தவிர, மக்களை துன்புறுத்துவதற்கு அல்ல என்பதை மனதில் நிலை நிறுத்தி அதற்கேற்ப ஆட்சியை திமுக அரசு நடத்த வேண்டும். இல்லையெனில் துன்பத்தினால் மக்கள் விடும் கண்ணீர் திமுக குடும்ப ஆட்சியை விரைவில் வீழ்த்தி விடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.