சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக அரசியலில் கட்சித் தாவல்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் ‘அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தில்’ முக்கியப் பொறுப்பில் இருந்த உசிலம்பட்டி கீதா, அந்த அமைப்பிலிருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார். மாநில தகவல் தொழில்நுட்ப (IT) அணி இணைச் செயலாளராக இருந்த இவர், தேர்தலுக்கு முன்னதாக ஓபிஎஸ் அணியிலிருந்து வெளியேறியது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
நேற்று (ஜனவரி 3-ஆம் தேதி) உசிலம்பட்டிக்கு வருகை தந்த மதுரை தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் மணிமாறனைச் சந்தித்த உசிலம்பட்டி கீதா, அவர் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். சொந்தக் கட்சி மீதான அதிருப்தி காரணமாக இந்த முடிவை எடுத்ததாகத் தெரிகிறது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் இத்தகைய மாற்றங்கள் தொகுதி வாரியாகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
