முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்த ஜே.சி.டி.பிரபாகர், சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யைச் சந்தித்து அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
எம்.ஜி.ஆரைப் பார்த்த மகிழ்ச்சி விஜய்யைச் சந்தித்தபோது தனக்கு ஏற்பட்டதாக அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இதுகுறித்து தேனியில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ஜே.சி.டி.பிரபாகர் தன்னுடன் தொடர்ந்து தொடர்பில்தான் இருப்பதாகவும், அவர் மாற்றுக் கட்சிக்குச் சென்றது அவரது தனிப்பட்ட விருப்பம் என்றும் நிதானமாகப் பதில் அளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், அதிமுக மீண்டும் பலம் பெற வேண்டுமானால் பிரிந்து கிடக்கும் அனைத்து சக்திகளும் ஒன்றாக இணைய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
எம்.ஜி.ஆர் உருவாக்கிய இந்த இயக்கம் சிதறிப் போயிருந்தால் ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் மலரச் செய்ய முடியாது என்றும், அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என முதன்முதலில் குரல் கொடுத்தது நான்தான் என்றும் அவர் தெரிவித்தார்.
பிரிந்து கிடந்தால் வெற்றி வாய்ப்பு இல்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், கட்சி ஒற்றுமையின் அவசியத்தை மீண்டும் ஒருமுறை உறுதிபடக் கூறினார்.
