திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளானூர் கிராமத்தில் ஆட்டோ டிரைவரான சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் காலி மனையில் வீடு கட்டினார். தற்போது வீடு கட்டி முடிக்கப்பட்டதால் தற்காலிக மின் இணைப்பை நிரந்தர மின் இணைப்பாக மாற்றி தருமாறு சுரேஷ் மின்வாரிய வணிக ஆய்வாளர் அன்பழகனிடம் கேட்டுள்ளார். அதற்கு அன்பழகன் 2000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதுகுறித்து சுரேஷ் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சுரேஷ் அன்பழகனிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அன்பழகனை கையும், களவுமாக கைது செய்தனர். அவர் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.