வட தமிழகத்தில் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய மறைந்த ‘காடுவெட்டி’ குருவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ‘படையாண்ட மாவீரன்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

வி.கே. புரொடக்ஷன்ஸ் தயாரித்த இந்தப் படத்தை வ. கௌதமன் இயக்கி, நடித்துள்ளார். சமுத்திரக்கனி, பூஜிதா பொன்னாடா, இளவரசு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவில், ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் சாம் சி.எஸ். இசையில் இப்படம் உருவாகியுள்ளது. ஆனால், வெளியீட்டு நாளில் இந்தப் படம் எதிர்பாராத சிக்கலில் சிக்கியுள்ளது.

படத்தில் சந்தனக் கடத்தல் வீரப்பனின் தனித்துவமான தோற்றத்தை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் கூறி, வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

வீரப்பனின் அடையாளங்களை சினிமா மற்றும் விளம்பரங்களில் பயன்படுத்துவதற்கு தடை கோரியுள்ள அவர், இந்தச் செயல் தனது கணவரின் தனித்தன்மையை மீறுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த மனு மீதான விசாரணையில், படத்தின் தயாரிப்பு நிறுவனமான வி.கே. புரொடக்ஷன்ஸ் செப்டம்பர் 26ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு படத்தின் வெளியீட்டுக்கு புதிய சவாலாக அமைந்துள்ளது.