மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திரமும் இந்திய சினிமாவின் ஆகச்சிறந்த நடிகர்களுள் ஒருவருமான மம்மூட்டி, நள்ளிரவில் வழிதெரியாமல் தவித்த போது, தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 10 கிலோமீட்டர் தூரம் தனது இருசக்கர வாகனத்தில் வழிகாட்டி அழைத்துச் சென்ற நெகிழ்ச்சியான சம்பவம் இணையத்தில் வைரலாகி அனைவரின் இதயங்களையும் வென்று வருகிறது.

காரைக்குடி பகுதியில் தனது புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு, அதிகாலை வேளையில் கேரளாவிற்குச் காரில் புறப்பட்ட மம்மூட்டிக்கு, திருப்பத்தூர் அருகே நெடுஞ்சாலை அடைக்கப்பட்டிருந்ததால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. தொழில்நுட்பத்தின் நவீன வழிகாட்டியான ‘கூகுள் மேப்’ கூட உதவாத நிலையில், மாற்றுப்பாதை தெரியாமல் மம்மூட்டியும் அவரது குழுவினரும் சாலையில் தவித்து நின்றுள்ளனர்.

அதிகாலை 3:30 மணியளவில் பட்டமங்கலம் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே காரை நிறுத்தி, வழி கேட்பதற்காக அவர்கள் நின்றபோதுதான் அந்த மறக்க முடியாத நெகிழ்ச்சித் தருணம் அரங்கேறியுள்ளது. அங்கு நின்றிருந்த ‘பாண்டியன்’ என்ற தமிழ் இளைஞர், காரில் இருப்பது இந்திய திரையுலகின் மாபெரும் நட்சத்திரம் மம்மூட்டி என்பதை உணர்ந்ததும் சற்றும் யோசிக்காமல் உதவ முன்வந்துள்ளார்.

கூகுள் மேப்பில் காட்டாத குறுகிய பாதைகள் மற்றும் கிராமத்துச் குறுக்கு வழிகள் வழியாகத் தனது பைக்கில் முன்னால் சென்று, சுமார் 10 கிலோமீட்டர் தூரம் வழிகாட்டி மம்மூட்டியின் காரைப் பத்திரமாகப் பிரதான நெடுஞ்சாலையில் கொண்டுபோய் சேர்த்துள்ளார்.

திரைத்துறையின் மாபெரும் ஆளுமை என்ற எந்தவித ஆடம்பரமும் இன்றி, தனக்கு உதவிய அந்த இளைஞரை அன்போடு கட்டிப்பிடித்துத் தழுவிய மம்மூட்டி, “இவர் என் நண்பன்” என்று நெகிழ்ச்சியோடு கூறி பாண்டியனின் மொபைல் போனை வாங்கி அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

தயாரிப்பாளர் ஆண்டோ ஜோசப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இந்த நெகிழ்ச்சியான வீடியோவைப் பகிர்ந்ததைத் தொடர்ந்து, நள்ளிரவிலும் எதிர்பாராத உதவியைச் செய்த தமிழ் இளைஞன் பாண்டியனின் மனிதநேயத்திற்கும், ஒரு மாபெரும் நடிகரின் எளிய மனிதப்பண்பிற்கும் சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.