தென்னிந்தியத் திரையுலகின் பிரபல முன்னணி மூத்த நடிகரான நாகார்ஜுனா, ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவதில் தான் பின்பற்றும் அதிரடியான மற்றும் கடுமையான இணைய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்துப் பேசி, ஒட்டுமொத்தத் திரையுலகத்தையும் ரசிகர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
ஹைதராபாத்தில் தெலங்கானா சைபர் செக்யூரிட்டி பியூரோ சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சைபர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், தனக்கு இருக்கும் பெரிய பயத்தையும், அதற்காகத் தான் மொபைலில் புகைப்படங்களோ அல்லது சுயபடங்களோ கூட சேமித்து வைப்பதில்லை என்பதற்கான காரணத்தையும் வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.
மேலும் தாம் ஒரு புகழ்பெற்ற திரைப் பிரபலமாக இருப்பதால், தனது ஸ்மார்ட்போன் எப்போதும் ஹேக்கர்களின் பார்வையில் இருந்து ஹேக் செய்யப்படலாம் என்ற அச்சம் தனக்கு எப்போதும் இருப்பதை நாகார்ஜுனா ஒப்புக் கொண்டுள்ளார். இதன் காரணமாகவே தனது கைப்பேசியில் எந்தவொரு புகைப்படத்தையும் சேமித்து வைப்பதையே முற்றிலும் தவிர்த்து விடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது இணையப் பாதுகாப்பை உறுதி செய்யத் தனது மொபைல் கடவுச்சொல்லை 15 நாட்களுக்கு ஒருமுறையும், வீட்டில் உள்ள வைஃபை கடவுச்சொல்லை மாதத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையும் தவறாமல் மாற்றி விடுவதாகக் கூறியுள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இதனால் சில ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு வந்த போலி வங்கி அதிகாரி அழைப்பு (Scam Call) மற்றும் தனது உறவினர் ஒருவர் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ மூலம் பண மோசடி அச்சுறுத்தலுக்கு ஆளான சம்பவத்தைக் குறிப்பிட்ட நாகார்ஜுனா, டிஜிட்டல் உலகில் விழிப்புடன் இருப்பது எவ்வளவு அவசியம் என்பதைச் சுட்டிக்காட்டினார்.
என்னைப் போன்ற பிரபலங்களுக்கே இந்த நிலை என்றால், அப்பாவி மூத்த குடிமக்களின் நிலை என்னவாகும்? எனக் கேள்வி எழுப்பிய அவர், பொதுமக்கள் அனைவரும் தங்களது தனிப்பட்ட தகவல்களையும் கடவுச்சொற்களையும் மிகவும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இணையக் குற்றங்கள் அதிகரித்து வரும் இந்த நவீனக் காலத்தில், நாகார்ஜுனா பின்பற்றும் இந்த அசாத்திய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன.
