கடின உழைப்பாலும் அர்ப்பணிப்பாலும் மருத்துவராகி, எதிர்பாராத திருப்பமாகத் திரையுலகிற்குள் நுழைந்து தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உருவெடுத்துள்ள நடிகை ஐஸ்வர்யா லட்சுமியின் திரைப் பயணம், பலருக்கும் ஒரு மிகப்பெரிய ஊக்கமளிக்கும் கதையாகும்.

எர்ணாகுளத்தில் உள்ள ஸ்ரீ நாராயணா மருத்துவ அறிவியல் கழகத்தில் எம்பிபிஎஸ் பட்டத்தைப் படித்து முடித்து முழுமையான மருத்துவராக உருவெடுத்த இவர், தொடக்கத்தில் சினிமாவில் நடிப்பதையோ அல்லது கலைத்துறையைத் தேர்வு செய்வதையோ தனது இலக்காகக் கொண்டிருக்கவில்லை.

அரசுப் அதிகாரிகளான இவரது பெற்றோர், சமூகம் மதிக்கக்கூடிய ஒரு நிலையான பணியையே அவர் செய்ய வேண்டும் என விரும்பிய சூழலில், படிப்புக்கு நடுவே மாடலிங் துறையில் தற்செயலாக நுழைந்ததுதான் இவரது வாழ்க்கைப் பாதையை மாற்றியமைத்த முதல் திருப்புமுனையாக அமைந்தது.

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போதே மாடலிங் செய்து வந்த ஐஸ்வர்யா லட்சுமிக்கு, 2017-ஆம் ஆண்டு நிவின் பாலி நடிப்பில் வெளியான ‘ஞண்டுகளுடே நாட்டில் ஓரிடவேளா’ என்ற மலையாளத் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து ஆஷிக் அபு இயக்கத்தில் வெளியான ‘மாயாநதி’ திரைப்படம் இவரது நடிப்புத் திறமையை உலகிற்குப் பறைசாற்றியதோடு, சிறந்த நடிகைக்கான அங்கீகாரத்தையும் தேடித்தந்தது.

மருத்துவத் துறையில் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து அவர்கள் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற கனவு ஒருபுறம் இருந்தாலும், திரையுலகில் அமைந்த எதிர்பாராத வாய்ப்புகளும், கடவுளின் திட்டமும் இவரை ஒரு திறமையான நடிகையாக மக்கள் மனதில் நிலைநிறுத்தின.

மலையாளத்தில் தடம் பதித்த கையோடு ‘ஆக்‌ஷன்’ படம் மூலம் தமிழிலும், தொடர்ந்து ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் ‘பூங்குழலி’ கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமும் பான்-இந்தியா அளவில் பெருமளவிலான ரசிகர்களைக் கவர்ந்தார். மேலும் ‘கார்கி’, ‘கட்டா குஸ்தி’ போன்ற படங்களில் வலுவான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம், தான் வெறும் கவர்ச்சி நடிகை மட்டுமல்ல, நடிப்புத் திறமைமிக்க கலைஞர் என்பதைத் தொடர்ந்து நிரூபித்து வருகிறார்.

‘கஷ்டப்பட்டு எம்பிபிஎஸ் படித்து முடித்தும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வாய்ப்பு எனக்கு அமையவில்லை, ஆனால் நடிப்புத் துறைக்கு வந்தது முற்றிலும் எதிர்பாராத ஒன்று’ என்று அவரே பல பேட்டிகளில் கூறியிருந்தாலும், மருத்துவர் எனும் கனவைக் கடந்து கலைத்துறையில் அவர் படைத்து வரும் சாதனைகள் தென்னிந்திய திரையுலகில் ஒரு தனித்துவமான மைல்கல்லாகவே பார்க்கப்படுகிறது.