திரைத்துறையில் தனக்கெனத் தனிமுத்திரை பதித்து தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரமாகத் திகழும் நடிகை சமந்தா, தற்போது சின்னத்திரையிலும் தடம் பதித்து ரசிகர்களுக்குப் புதிய அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளித்துள்ளார். பிரபல தமிழ் தொலைக்காட்சியான ஜீ தமிழ் ஒளிபரப்பவுள்ள ‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ்’ என்ற பிரம்மாண்ட சமையல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க உள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் நடைபெற்ற ‘ஜீ விழா’ மேடையில் இந்த அறிவிப்பு மிக விமரிசையாக வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, சின்னத்திரை வட்டாரத்திலும் சமந்தாவின் ரசிகர்களிடையேயும் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது. வெள்ளித்திரையில் தனது அபார நடிப்புத் திறமையால் கோடி கணக்கான ரசிகர்களைக் கவர்ந்த சமந்தா, ஏற்கனவே ‘சாம்பெல்’ என்ற தெலுங்கு சாட் ஷோ நிகழ்ச்சியைத் வெற்றிகரமாகத் தொகுத்து வழங்கிய அனுபவம் கொண்டவர்.
இருப்பினும், தமிழ் சின்னத்திரையில் அவர் ஒரு சமையல் சார்ந்த பிரம்மாண்ட ரியாலிட்டி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவது இதுவே முதன்முறை என்பதால் இதன் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சியின் இந்த புதிய முயற்சி மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற ‘மாஸ்டர்செஃப்’ பிராண்ட் இணைந்திருப்பது, வார இறுதி நாட்களில் தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய விருந்தாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இந்நிலையில் திரையுலகில் பல தடைகளைத் தாண்டி தனது சொந்த முயற்சியால் உச்சம் தொட்ட சமந்தா, தற்போது சின்னத்திரையில் தொகுப்பாளினியாக களமிறங்குவது அவரது பயணத்தில் மற்றுமொரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்கும் இந்த ‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப்’ நிகழ்ச்சியில், சமந்தாவின் சுவாரஸ்யமான பேச்சு மற்றும் அவரது கலகலப்பான அணுகுமுறை நிகழ்ச்சியை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த செய்தி, தொலைக்காட்சி உலகிலும் மாபெரும் விவாதப் பொருளாகவும் சென்சேஷனாகவும் மாறியுள்ளது.
