புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வந்த அரசு அலுவலகங்களை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இடமாற்றம் செய்தனர். அப்போது செட்டில்மெண்ட் அலுவலகத்தில் இருந்து மன்னர் காலத்து பழமையான செப்பேடு, முத்திரை பதித்த ஓவியப் பலகை ஆகியவை எடுக்கப்பட்டு மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. நேற்று மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு 2 அரிய பொருட்களையும் புதுக்கோட்டை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் பக்கிரிசாமியிடம் ஒப்படைத்தார்.
இந்நிலையில் செப்பேடு மற்றும் ஓவியப் பலகை குறித்து தொல்லியல் ஆய்வாளர் கரு.ராஜேந்திரன் கூறியதாவது, சுமார் 200 ஆண்டுகளுக்கு மேல் பழமையான செப்பேட்டில் கடந்த 1798- ஆம் ஆண்டு புதுக்கோட்டை மன்னர் விஜய ரகுநாத தொண்டைமான் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் அகண்ட தீபம் ஏற்றுவதற்காக சிங்கத்தாகுறிச்சி கிராமத்தில் இருக்கும் ஒரு நிலத்தை கோவிலுக்கு தானமாக வழங்கியது குறித்து கூறப்பட்டுள்ளது.
அது தொடர்பான விவரம் தான் அந்த செப்பேட்டில் எழுதப்பட்டுள்ளது. இதே போல மன்னர் ஆட்சி காலத்து அரசின் முத்திரை பதித்த ஓவிய பலகையும் மிகவும் பழமையானது. இந்த ஓவியம் மூலிகைகளாலும், தாவரங்களாலும் வரையப்பட்டது என்பதே இதன் சிறப்பு அம்சம். இரண்டு பொருட்களும் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்படும் என கூறியுள்ளார்.