நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காவேரி ஆர்.எஸ் கரட்டாங்காடு உள்ளிட்ட பகுதியில் தெரு நாய்களின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நேற்று 7 வயது சிறுமி உட்பட 7 பேரை தெருநாய்கள் கடித்தது. இதில் படுகாயமடைந்த மூன்று பேர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, கடந்த சில நாட்களாக தெரு நாய்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இது குறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தெரு நாய்களுக்கு வெறி நாய் கடி தடுப்பூசி போட வேண்டும் என கூறியுள்ளனர். இதுகுறித்து ஆலம்பாளையம் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் கூறும்போது, ப்ளூ கிராஸ் மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். இரண்டு நாட்களில் தெரு நாய்கள் அட்டகாசத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என கூறியுள்ளனர்.