கர்நாடக மாநிலத்தில் உள்ள கங்கிலிபுறா பகுதியில் கலிமுல்லா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சல்மான்கான்(23) வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஆவார். இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் ராம்நகரில் இருக்கும் உறவினர் வீட்டில் தங்கி இருந்தபோது அதே பகுதியில் வசிக்கும் சிறுமியை காதலித்துள்ளார். அந்த சிறுமிக்கு திருமண ஏற்பாடுகள் நடந்தது. இதனை அறிந்த சல்மான்கான் தன்னை காதலிக்கும் போது எடுத்த புகைப்படத்தை அனுப்பி திருமணத்தை நிறுத்திவிட்டார்.

இதனையடுத்து சிறுமிக்கு மீண்டும் திருமண ஏற்பாடுகள் நடந்த போது சல்மான்கான் அந்த திருமணத்தையும் நிறுத்த முயற்சி செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதற்கிடையில் கடந்த ஜனவரி மாதம் 10-ஆம் தேதி திடீரென சல்மான்கான் காணாமல் போனதால் அவரது தாய் பானு தனது மகனை காணவில்லை ஓசூர் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள தாவரக்கரே பகுதியில் இருக்கும் ஏரியில் சல்மான் கான் கொலை செய்யப்பட்ட சடலமாக கிடந்தார். இது தொடர்பாக ஓசூர் ராம்நகரை சேர்ந்த சாதிக், ஜான் பாஷா, ரஜீத், முகமது அலி, ஸ்ரீகாந்த், கமலேசன் ஆகிய 6 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் விவகாரத்தில் வாலிபர் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.