கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலையில் ஆழியாற்றங்கரை செல்லும் வழியில் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கான சுடுகாடு (கபர்ஸ்தான்) ஒன்று உள்ளது. இந்நிலையில் அந்த சுடுகாட்டை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறி கடந்த 2 மாதங்களுக்கு முன், தாசில்தார் அலுவலகத்தில் மனு ஒன்று அளிக்கப்பட்டது. அப்போது தாசில்தார் மாரீஸ்வரன் அந்த மனுவை பெற்று கொண்டு, சுடுகாடு இடத்தை அளவீடு செய்தார். மேலும் ஆக்கிரமிப்பு செய்த 80 சென்ட் நிலத்தையும் முஸ்லிம் சமூகத்தினருக்கே அளந்து கொடுத்தார். இதனையடுத்து சுடுகாட்டில் இருந்த 24 தென்னை மரங்களுக்கு பட்டா வழங்கியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் அந்த பட்டா ரத்தானதாகவும், ஆனால் அருகே உள்ள தோட்ட உரிமையாளர் சுடுகாட்டில் தண்ணீர் விட்டதால், அங்கு புதைக்கப்பட்ட சடலங்கள் பூமிக்குள் சென்றதாகவும்  கூறப்படுகிறது. இதனையடுத்து தோட்ட உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முஸ்லிம் சமூகத்தினர் 150-க்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் ஆனைமலை-சேத்துமடை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து  போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த தோட்ட உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.