மார்த்தாண்டம் அருகே உள்ள மாமூட்டுக்கடை பகுதியில் வசிப்பவர் மெல்பின் (37). வெளிநாட்டில் தொழிலாளியாக வேலை பார்த்து வரும் இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், அதே பகுதியை சேர்ந்த சசிகலா (32) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் இவர்களுக்கு மெர்ஜித் (3½) என்ற மகன் இருந்தான். இந்நிலையில் நேற்று காலையில் சசிகலா தனது குழந்தை மற்றும் தாயாருடன் ஒரு ஆட்டோவில் காப்புக்காட்டில் உள்ள ஒரு இடத்தில் ஜோதிடம் பார்க்க சென்று, பின் தாயாரை வீட்டுக்கு அனுப்பியுள்ளார். இதன் பிறகு அவர் தனது குழந்தையுடன் அதே ஆட்டோவில் மண்டைக்காடு பகுதிக்கு சென்றார். அப்போது வரும் வழியில் சாப்பிடுவதற்காக பிரியாணி பொட்டலம் வாங்கியதாகவும், அதை மண்டைக்காடு அருகே வெட்டுமடை கடல் பகுதிக்கு சென்ற சசிகலா, அங்கு ஆட்டோவில் இருந்தபடி பிரியாணியை சாப்பிட்டதாகவும் தெரிகிறது.
பின்னர் அவரிடம் கையை கழுவி விட்டு வருவதாக கூறி, குழந்தையுடன் கடலை நோக்கி சென்ற அந்த பெண் நீண்ட நேரமாகியும் திரும்பிவரவில்லை. இதனால் ஆட்டோ டிரைவர் அச்சமடைந்துள்ளார். மேலும் அவர் ஒரு மாற்றுத்திறனாளி என்பதால் ஆட்டோவில் இருந்து இறங்கி அவர்களை தேட முடியாத நிலையில், அங்கு வந்த ஒரு வாலிபரிடம் கூறி, பார்க்க சொன்னார். உடனே அந்த வாலிபர் விரைந்து சென்று கடலில் பார்த்துள்ளார். அப்போது சசிகலா பிணமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர் கடலில் குதித்து சசிகலாவின் உடலை மீட்டு கரை சேர்த்தார்.
ஆனால் குழந்தையை காணவில்லை. ஆகவே குழந்தையும் கடலில் மூழ்கியிருக்கலாம் என அஞ்சி கடலோர காவல் குழும போலீசார் அந்த பகுதியை சேர்ந்த மீனவர்களின் உதவியுடன் குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் குழந்தையுடன் கடலில் குதித்து அந்த பெண் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்படும் நிலையில், கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.