நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கும் மத்திய அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாகத் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தணிக்கை வாரியம் என்பது சட்ட ரீதியாகச் செயல்படும் ஒரு தன்னாட்சி அமைப்பு என்றும், அதன் நடைமுறைகளை அரசியலாக்கி காங்கிரஸ் கட்சியினர் மக்களைத் திசை திருப்புவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

அவசரநிலை பிரகடனத்தின் போது கருத்துச் சுதந்திரத்தை நசுக்கியவர்களுக்கும், பல திரைப்படங்களை நேரடியாகத் தடை செய்த வரலாறு கொண்டவர்களுக்கும் தணிக்கை குறித்துப் பேசத் தார்மீக உரிமை இல்லை என்று அவர் சாடியுள்ளார். மேலும், திரையுலகினருக்கு திமுக தரப்பில் கொடுக்கப்படும் அழுத்தங்கள் குறித்து விமர்சித்த தமிழிசை, திரையரங்குகள் கிடைப்பதில் கூட அரசியல் செய்யப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

விஜய் அரசியலுக்கு வருவது தவறல்ல, ஆனால் அவரது படத்தை அரசியல் ஆக்குவது வேடிக்கையாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். முறையான தணிக்கைச் சான்றிதழ் கிடைக்கும் முன்னரே வெளியீட்டுத் தேதியை அறிவித்துவிட்டு, பின்னர் அரசுக்கு அழுத்தம் கொடுப்பது சரியான நடைமுறை அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார். சட்ட ரீதியான நடைமுறைகள் முடிந்து ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாவதை மற்றவர்களைப் போலவே தானும் ஆவலோடு எதிர்பார்ப்பதாக அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.