மும்பையில் ஞாயிற்றுக்கிழமையில் இருந்து தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நகரம் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், திங்கள்கிழமை காலை மும்பையின் பல பகுதிகளில் மீண்டும் பெய்த கனமழையின் நேரத்திலேயே ஏசி உள்ளூர் ரயிலில் மழைநீர் கசியும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோ, மழைக்காலங்களில் புறநகர் ரயில் சேவையின் பராமரிப்பு மீதான கடுமையான விமர்சனங்களை கிளப்பியுள்ளது.

வீடியோவில், ஏசி உள்ளூர் ரயிலின் ஒரு பெட்டிக்குள் மழைநீர் கசியும் காட்சியும், பயணிகள் தங்களது இருக்கைகளை தண்ணீரில் இருந்து பாதுகாக்க கஷ்டப்படும் காட்சிகளும் பதிவாகியிருந்தன. ‘ஜெய் ஹோ’ என்ற பயனர் X தளத்தில் பகிர்ந்த இந்த வீடியோவில், “இதுதான் மும்பை ஏசி லோக்கல்… உள்ளே முழுக்க மழைநீர் வருகிறது… இதற்காகத்தான் நாங்கள் இவ்வளவு பணம் செலுத்துகிறோமா?” எனக் கடும் கேள்வியுடன் பதிவு செய்திருந்தார்.

 

மேலும், ரயில்வே அமைச்சகம், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோரை அவர் டேக் செய்துள்ளார். இந்நிலையில், பயணிகள் புகாருக்கு ரயில்வே சேவா அதிகாரப்பூர்வ X கணக்கில் பதிலளித்துள்ளது. இந்த புகார் மத்திய ரயில்வேயின் மும்பை கோட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த சம்பவம் மூலம் ஏசி ரயில்கள் போன்ற வசதிகள் மழைக்காலங்களில் கூட அடிப்படை பாதுகாப்பை வழங்கத் தவறுகின்றன என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு குறைபாடுகள் குறித்து பயணிகள் மட்டுமின்றி பொதுமக்களிடையும் நம்பிக்கையிழப்பை ஏற்படுத்தும் இந்த வீடியோ, தற்போது சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.