உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 21 வயது இளம் பெண்ணின் வயிற்றில் இருந்து மருத்துவர்கள் அரை கிலோ எடையுள்ள முடி கட்டியை அகற்றிய அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. கௌசாம்பி மாவட்டத்தைச் சேர்ந்த மஞ்சு என்ற அந்த இளம்பெண், சிறு வயதிலிருந்தே மன அழுத்தம் மற்றும் நடத்தைக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அதன் காரணமாக தனது தாய் மற்றும் சகோதரிகளின் முடியை பறித்து சாப்பிடும் பழக்கத்திற்கு ஆளாகி இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த மனநிலை குறைபாட்டால், மஞ்சு வயிற்றில் மெதுவாக முடி ஒன்று பந்தாக உருண்டு வளர்ந்துள்ளது. தொடக்கத்தில் வலி, வாந்தி, பசிக்கேடு போன்றவை ஏற்பட்டு, அவரது உடல் எடை வேகமாக குறையத் தொடங்கியது. பல மருத்துவமனைகளில் பரிசோதனை செய்தும் நோய் கண்டுபிடிக்கப்படவில்லை. இறுதியாக பிரயாக்ராஜ் நகரில் உள்ள நாராயண் ஸ்வரூப் மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிறப்பு மருத்துவர்கள் குழுவால் இரண்டு மணி நேர அறுவை சிகிச்சை மூலம் அந்த அரை கிலோ எடையுள்ள முடி கட்டி அகற்றப்பட்டது.

மருத்துவர்கள் தெரிவித்ததாவது, “அந்த முடி கட்டி 1.5 அடி நீளமும் 10 செ.மீ தடிமனும் கொண்டது. இது டிரைக்கோபெசோவர் எனப்படும் ஒரு அபூர்வமான நிலை. உணவுப்பையில் முடி சிக்கி படிப்படியாக ஒரு பெரிய கட்டியாக உருவானது. உணவுப் பையை திறந்து முடி அகற்றப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டது. தற்போது நோயாளி நலமாக உள்ளார்.” மருத்துவர்களின் இந்த உன்னத சேவை, அப்பெண்ணின் உயிரைக் காப்பாற்றியதில் பெரும் பாராட்டுகளுக்கு உள்ளாகியுள்ளது. இதனை அடுத்து, அவரது குடும்பத்தினர் மனநோயளிக்காக ஆலோசனை மற்றும் சிகிச்சை பெறும் நடவடிக்கையையும் மேற்கொண்டுள்ளனர்.