கோவையில் இளைஞர் ஒருவர் ஒரு கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிரவைத்துள்ளது. இந்த வீடியோவைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
கோவையில் நடுரோட்டில் வைத்து ஒரு இளைஞரை ஒரு கும்பல் ஆயுதங்களால் கொடூரமாகத் தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தச் சம்பவத்தைச் சுட்டிக்காட்டி தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்பது பெயரளவில் கூட இல்லை; இது திமுகவின் ‘கஞ்சா மாடல்’ ஆட்சியைத் தான் காட்டுகிறது” என்று விமர்சித்துள்ளார்.
“தினமும் கொலை, கொள்ளை, போதைப்பொருள் புழக்கம் எனத் தமிழகம் சீரழிந்து வருகிறது. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டிருப்பதையே இதுபோன்ற பொதுவெளித் தாக்குதல்கள் காட்டுகின்றன.
குற்றவாளிகள் அச்சமின்றி உலா வருவது பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது” என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
