தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் இடையிலான மோதலில், ஓபிஎஸ் பக்கம் நின்ற முக்கியத் தளபதிகள் ஒவ்வொருவராக கழன்று வருவது அந்த அணியைப் பலவீனப்படுத்தியுள்ளது.

அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், ஒரத்தநாடு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம், இன்று தனது எம்.எல்.ஏ பதவியை அதிரடியாக ராஜினாமா செய்தார்.

சபாநாயகர் அப்பாவுவிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கிய கையோடு, சென்னை அண்ணா அறிவாலயம் சென்ற அவர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.

“அதிமுக தற்போது சுதந்திரமாகச் செயல்படவில்லை; எடப்பாடி பழனிசாமி சர்வாதிகாரப் போக்கைக் கடைபிடிக்கிறார். ஓபிஎஸ் கூட்டணியைத் தேர்வு செய்வதில் தாமதம் செய்ததால், அண்ணா தொடங்கிய தாய் கழகமான திமுகவில் இணைந்துவிட்டேன்” என வைத்திலிங்கம் தனது முடிவுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

இவருடன் சேர்ந்து முன்னாள் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன் மற்றும் குன்னம் ராமச்சந்திரனும் திமுகவில் இணைந்துள்ளது ஓபிஎஸ் அணிக்கு அடுத்தடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.