கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்த மனிதநேய ஜனநாயக கட்சி, இப்போது வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலுக்கும் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் நடைபெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின் வடமேற்கு மண்டல தேர்தல் பணி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி பங்கேற்றுச் சிறப்புரையாற்றினார்.
இந்தக் கூட்டத்தில், “தமிழகத்தின் மதச்சார்பற்ற கொள்கைகளைக் காக்க திமுக கூட்டணி மீண்டும் அரியணை ஏறுவது அவசியம்” என வலியுறுத்தப்பட்டது.
குறிப்பாக, வடமேற்கு மண்டலத்திற்குட்பட்ட 32 சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணியைப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடந்த முறை சீட் ஏதும் எதிர்பார்க்காமல் ஆதரவு அளித்த நிலையில், இந்த முறை தமிமுன் அன்சாரிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் பலமாக நிலவுகிறது.
