இயற்கையின் விந்தையாகப் பார்க்கப்படும் இந்தப் பாம்பின் வேட்டைத் திறன், இணையவாசிகளின் கண்களை விரிய வைத்துள்ளது. காட்டுயிர்கள் உலகில் பசி வந்துவிட்டால் விலங்குகள் எந்த எல்லைக்கும் செல்லும் என்பதற்கு இந்த வீடியோ ஒரு சிறந்த உதாரணம். @NatureChapter என்ற எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், ஆற்றுக்கு மேலே தொங்கும் ஒரு கொடியில் பாம்பு ஒன்று லாவகமாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது.

தண்ணீருக்குள் மீன்கள் நீந்துவதைக் கூர்ந்து கவனித்த அந்தப் பாம்பு, திடீரென மின்னல் வேகத்தில் தண்ணீருக்குள் பாய்ந்து ஒரு மீனைத் தனது வாயால் கவ்விப் பிடிக்கிறது.

பொதுவாகப் பாம்புகள் நிலத்திலோ அல்லது தண்ணீருக்குள் நீந்தியோதான் வேட்டையாடும். ஆனால், இது ஏதோ கொக்கைப் போல மேலிருந்து குறிவைத்துத் தாக்கியது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

மீனைப் பிடித்த பிறகும் அதைக் கெட்டியாகக் கவ்வியபடி மீண்டும் தண்ணீருக்குள்ளேயே அந்தப் பாம்பு செல்வது போன்ற 31 நொடி காட்சிகள் வைரலாகி வருகிறது.

இதுவரை 5 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ள இந்த வீடியோவை கண்டு, “இந்தப் பாம்பு மீனைத் தண்ணீரில் மூழ்காமல் காப்பாற்றுகிறது போல” என்று நெட்டிசன்கள் கிண்டலாகவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.